டில்லி

ள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேசி வரும் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே வன்முறை நீடித்து வருகிறது. வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மணிப்பூரில். வன்முறையைக் கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் வன்முறையின் போது ஆண்கள் கும்பலால் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த  விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த நிலையில் இதில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் கடந்த சில நாட்களாக முடங்கியுள்ளன. அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  தற்போது நாடாளுமன்றத்தின் மக்களவையில் கூட்டுறவுச் சங்க சட்டத் திருத்த மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.  அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.