லக்னோ:

உ.பி. மாநிலத்தில் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு போட்டியிட்ட தொகுதி அலகாபாத் மாவட்டத்தில் உள்ள புல்பூர் லோக்சபா தொகுதியாகும்.

இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பாஜ மாநில தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா உள்ளார். இவர் கடந்த மார்ச் 19ம் தேதி உ.பி. துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். 6 மாதத்தில் இவர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். இதற்கான காலக்கெடு வரும் செப்டம்பர் 18ம் தேதியுடன் முடிகிறது.

சமீபத்தில் முலாயம் சிங் மற்றும் சிவ்பால் யாதவுக்கு நெருக்கமான இரு எம்எல்ஏ.க்கள் பதவி விலகலால் 2 தொகுதிகள் காலியாக உள்ளது. இதில் ஒரு தொகுதியில் மவுரியா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அதேபோல் முதல்வர் ஆதித்யாநாத்தும் கோராக்ப்பூர் லோக்சபா எம்.பி.யாக உள்ளார். இவரும் அந்த கால க்கெடுவிற்குள் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இந்த இரு தொகுதிகளில் ஒன்றை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மவுரியா, ஆதித்யாநாத், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரும் அவரவர் வகிக்கும் எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தாக வேண்டும். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களை கணக்கிட்டு இவர்கள் 3 பேரும் எம்பி பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தனர்.

இதில் உபி மாநிலத்தில் கோராக்ப்பூர் லோக்சபா தொகுதியை பற்றிய கவலை பாஜவுக்கு இல்லை. இது ஆதித்யாநாத் கோட்டை. அதனால் அங்கு இடைத்தேர்தலில் பாஜ எளிதில் வெற்றி பெற்றுவிடும். அதே சமயம் மவுரியாவின் தொகுதி தான் கேள்விகுறியாகியுள்ளது.

சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ள மாயாவதி அனைத்து எதிர்கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு புல்பூர் தொகுதியில் போட்டியிட்டும் மீண்டும் லோக்சபாவுக்குள் நுழைய திட்டமிட் டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரில் எதிர்கட்சிகளின் அணியில் இருந்து நிதிஷ்குமாரை பிரித்து பாஜ கூட்டணி அமைத்துக் கொண்டது. அதனால் மோடி, அமித்ஷாவை எதிர்க்க மீண்டும் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் புல்பூர் தொ குதி இடைத்தேர்தலில் மாயாவதியை ஆதரிக்க காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகள் முடிவு எடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே எந்த தேர்தல் என்றாலும் ஒரு வேட்பாளர் என்ற கொள்கையை அனைத்து எதிர்கட்சிகளும் கொண்டுள்ளன.

எனினும் எதிர்கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் மவுரியாவை துணை முதல்வர் பதவியில் இருந்து விலக பாஜ மேலிடம் வற்புறுத்தும் என தெரிகிறது. இதன் மூலம் அவர் எம்.பி.யாக நீடிப்பார். அதே சமயம் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் இவர் அமைச்சராக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் புல்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தவிர்க்க முடியும் என பாஜக தலைவர்கள் நினைக்கின்றனர்.

பீகாரை தொடர்ந்து குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை உடைத்து அகமது படேலின் ராஜ்யசபா உறுப்பினர் வெற்றியை பறித்துள்ளது. அடுத்து வரும் குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ள பாஜ தயாராகி வருகிறது. இந்த நிலையில் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு இடம் கொடுக்கும் வகையில் புல்பூர் தொகுதியில் மாயாவதியின் வெற்றி அமைந்துவிடக் கூடாது என்று பாஜ கணக்கிடுகிறது.

ஏற்கனவே 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜ.வை வீழ்த்த காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருகின்றன. இதற்கு புல்பூர் தொகுதி காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக தான் மவுரியாவின் எம்பி பதவி ராஜினாமாவுக்கு பாஜக மேலிடம் தடை போட முடிவு செய்துள்ளது. இன்னும் இதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

அடுத்த கட்ட முயற்சியாக எதிர்கட்சிகளின் கூட்டணியில் முலாயம் சிங் பலவீனமாக இருப்பதை பாஜ கூர்ந்து கவனித்து வருகிறது. மாயாவதிக்கு ஆதரவு அளிப்பதில் முலாயமுக்கு எந்த தடங்கலும் இருக்காது. ஆனால், அவர் தனது மகன் அகிலேஷ் யாதவை முதலில் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.