சென்னை:

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன்படி தமிழகம் முழுவதும் வரும 13ந்தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை  11 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில்  மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும்  இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அதையடுத்து, அனைத்துக்கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூட்ட தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்படி, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.

மேலும், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை  கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்கள், அரசியல் கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.