சென்னை; சட்டமன்றத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக 65 எம்எல்ஏக்களில் 61பேர் ஆதரவை பெற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்த விலக்கி, உதயக்குமாரை நியமனம் செய்து, அது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தார். ஆனால், சபாநாயகர் அதன்மீது நடவடிக்கை எடுக்காததால், இன்று அவையில், எடப்பாடி பழனிச்சாமி பிரச்சினை எழுப்பினார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் சபாநாயகருக்கு எதிரான அவையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால், அவை அமளிதுமளிப் பட்டது.

 இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இதையடுத்து சபையில் விளக்கம் அளித்த அப்பாவு, எதற்கோ பயந்து பழனிசாமி தரப்பு அமளியில் ஈடுபடுவதாகவும், இந்தி எதிர்ப்பு அறிக்கை, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைகளுக்கு பயந்து அவர்கள் அவைவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியதுடன்,

சட்டப்பேரவையை பொறுத்தவரை, எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. விதிப்படி துணைத்தலைவர் பதவியே இல்லை. ஆனால், எதிர்கட்சி துணை தலைவர் பதவி என்பது அந்தந்த கட்சி கொடுப்பது. அதற்கு சட்டமன்றத்தில் அங்கீகாரம் கிடையாது என கூறினார்.

மேலும், சட்டசபை அலுவல் ஆய்வு குழுவில் யாரை சேர்க்க வேண்டும் சேர்க்கக்கூடாது என்பது சபாநாயகரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.