டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பெண் எம்.பி.க்களைக் கொண்டு தாக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியதாகவும், அதனாலேயே பிரதமரை  அவைக்கு வர வேண்டாம் என தடுத்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் கூறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“அவர்களின் திட்டம் தெரிந்துதான் அவைக்கு வர வேண்டாம் என்று பிரதமரிடம் சொன்னேன்”  என சபாநாயகர்  காங்கிரஸ் எம்பிக்கள் மீது  குற்றச்சாட்டு சுமத்திய நிலையில்,  சபாநாயகர் குற்றச்சாட்டுக்கு பிரியங்கா உள்பட  எதிர்க்கட்சிகளின்   எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து கடந்த ஜனவரி 28ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன்  தொடங்கியது. ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.  இந்த கூட்டத்தொடரில் முதல் கட்டம்,  பிப்ரவரி 13ஆம் தேதிவரை முதல் கட்டமாகவும், மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதிவரை இரண்டாம் கட்டமாகவும்   நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரில்,  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  அந்த வகையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி  பிப்ரவரி 4ந்தேதி  மக்களவையில் பதிலுரை ஆற்ற இருந்தார். ஆனால், பிரதமர் மோடி நேற்று அவைக்கு வரவில்லை, அவரது உரை ரத்து செய்யப்பட்டது.

இதனால், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க அஞ்சி பிரதமர் மோடி மக்களவைக்கு வரவில்லை என காங்கிரஸ் குற்றஞ்சாட்டின.

இந்த நிலையில்,  நேற்று மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது,  குடியரசு தலைவரின்  உரைக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டியிருந்தபோது, ​​காங்கிரஸ் கட்சியின் பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கைக்குச் சென்று எதிர்பாராத ஒன்றைச் செய்யக்கூடும் என்ற உறுதியான தகவல் எனக்குக் கிடைத்தது. இந்த காட்சியை நான் அவையில் கூட பார்த்தேன்.

அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளையே உடைக்கும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வாக இருந்திருக்கும். இதைத் தவிர்க்கவே, பிரதமர் அவைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக் கொண்டேன்” என்று பதிலடி கொடுத்தார்.

பாநாயகர் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி, “நேற்று அவையில் 3 பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன்பு நின்றதால், உள்ளே வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. சபாநாயகர் பின்னால் ஒளிந்து கொண்டு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்க முயற்சி என அபத்தமாக கூறுவதா…? பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை என்பதே உண்மை” என்றார். 

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அதுல் லோந்தே பாட்டீல் கூறுகையில், “உண்மை என்னவென்றால், பிரதமர் யதார்த்தத்தைக் கண்டு பயப்படுகிறார். நரவனே ‘தராவனே’ (பயம் அளிப்பவர்) ஆகிவிட்டார் என்பதே இதன் முக்கிய காரணம். அதனால்தான் பிரதமர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. கேள்விகள் கேட்பது தாக்குதல் அல்ல. பிரதமர் கேள்விகளைத் தவிர்க்கிறார்” என்றார். 

முன்னதாக, நேற்று மாலை 5 மணியளவில், பிரதமர் தனது உரையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுமார் எட்டு அல்லது ஒன்பது பெண் மக்களவை உறுப்பினர்கள், “சரியானதைச் செய்யுங்கள்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி, அவையில் பிரதமரின் இருக்கையை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தைதான், ‘இந்த காட்சியை நான் அவையில் கூட பார்த்தேன்’ என சபாநாயகர் விவரித்திருந்தார்.

கரூர் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்ட எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களின் இந்த செயலை சில மத்திய அமைச்சர்கள் கண்டித்து, அவர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து அவர்களின் முற்றுகை முடிவுக்கு வந்தது. பெண் எம்.பி.,க்களை அரணாக வைத்து, எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை தாக்க சதி திட்டம் தீட்டியதாக தகவல்கள் வெளியாகின.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த நடத்தை பெரும் கரும்புள்ளி என்றும், நாடாளுமன்ற மரபுகளுக்குப் பொருத்தமற்றது என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா  பேசியிருந்தார். இதனால், ஓம் பிர்லா  அவையை முழுவதுமாக ஒத்திவைத்தது மட்டுமின்றி பிரதமர் உரையையும் ரத்து செய்தார்.

பிரதமரின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் இன்று மதியம் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேறியது.

இதுவரை வெளிவராத முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே எழுதியுள்ள Four Stars Of Destiny என்ற புத்தகம் குறித்த இந்தியாவின் பிரபல ஆங்கில இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையின் பிரதியை கையில் வைத்துக்கொண்டு சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து மக்களவையில் ராகுல் காந்தி பேச முயற்சித்தார். ஆனால் அதற்கு விதிகளை காரணம் காட்டி ராகுல் காந்தி அவையில் உரையாற்ற அனுமதிக்கப்படவில்லை.

[youtube-feed feed=1]