சென்னை:

த்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தமிழக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் அந்த பேச்சு வார்த்தை எந்த ஒரு பதிலையும் எட்டவில்லை. வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் கட்டாயம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடும் குளிரில் இரவு பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் பெரும் ஆதரவு பெருகியுள்ளது. ஆனால் மத்திய அரசு என்னவோ அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை.

இதையடுத்து டிசம்பர் 9 ஆம் தேதி அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்றும், அதற்கு விவசாய பிரதிநிதிகள் ஆலோசனை செய்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு தமிழக எதிர்கட்சிகளான திமுக, காங்கிரஸ், சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.கே, எம்.டி.எம்.கே மற்றும் நட்பு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.