தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சயம் பாபுராவ் தனது மகனின் திருமணத்திற்கும் தனக்கு வீடு கட்டுவதற்கும் தேவையான பணத்துக்கு தனது எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்திக் கொண்டதாக கூறினார்.
பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சயம் பாபுராவ் “இன்று, வீடு இல்லை என்றால், மதிப்பு இல்லை, எனவே வீடு கட்டுவதற்காக எனது தொகுதி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்தினேன்.
இதை எந்தத் தலைவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நான் ஒப்புக்கொள்கிறேன். தவிர, என் மகன் திருமணத்திற்கு தேவைப்பட்ட பணத்துக்கும் எம்.பி. களின் நிதியைப் பயன்படுத்தினேன்.
இதற்கு முன்னிருந்த எம்.பி.க்கள் முழு வளர்ச்சி நிதியையும் ஏப்பம் விட்டார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு கட்சியில் இணைந்தவர்கள் என் மீது பொய் பிரசாரம் செய்கின்றனர்.” என்று பேசினார்.
தொகுதி வளர்ச்சி நிதியை தனது சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்ட எம்.பி. பேசிய பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனையடுத்து, எந்தெந்த திட்டங்கள் எந்தெந்த வகையில் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களை ஒப்பந்தங்கள் மற்றும் ரசீதுகளை சரிபார்க்காமல் பாஜக எம்.பி.க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி தாராளமாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டிய எம்.பி., நிதியை தன் விருப்பப்படி செலவு செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள் எம்பி சயம் பாபுராவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் தனது தொகுதி வளர்ச்சி நிதி எதற்கு பயன்படுத்தப்பட்டது என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் பாபுராவே ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த நிதியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துவருகின்றன.