டில்லி:

ந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்ற அஞ்சல்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களையில் இணைந்து மத்தியஅரசுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து இரு அவைகளையும் முடக்கிய நிலையில், மோடி அரசு பணிந்து, தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.

தற்போது நடைபெற்ற  அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனிமேல் நடைபெறும் தேர்வுகள்  தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் அறிவித்தார்.

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14ந்தேதி) தபால்துறை பணிக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்றது. இதன் காரணமாக தமிழக மாணவர்கள் கேள்விகளை எதிர்கொள்ள கடும் சிரமப்பட்டனர்.

இந்தியை திணிக்கும் நோக்கில் மத்தியஅரசு கொண்டு வந்த தேர்வு முறைக்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்திலும் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், இன்று மக்களவை மற்றும்  மாநிலங்களவையிலும் தமிழக எம்.பி.க்கள் காரசார மாக கேள்வி எழுப்பினர். இதன் காரணமாக சபை நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தபால்துறை தேர்வை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது.

தமிழக எம்.பி.க்களின் அதிரடி நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இதுபோன்று தமிழகத்தை வஞ்சிக்கும் திட்டங்களான  ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ,  கூடங்குளம் அணுக்கழிவு போன்ற விவகாரங்களிலும் கட்சி பேதமின்றி ஒன்றுப்பட்டு குரல் கொடுத்தால், தமிழகத்தை  சுடுகாடாக மாற்றும் மத்திய அரசின் கனவு கலைந்துவிடும் என்பதில் வியப்பேதும் இல்லை….