டெல்லி: மேஜை மீது ஏறி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதை கண்ட மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டார். மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் காக்கத் தவறிவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 11ந்தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, பாராளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக மத்தியஅரசு மீது குற்றம் சாட்டி எம்.பி.க்கள் பாராளுமன்ற மாண்பை மீறி அமளியில் ஈடுபட்டும், அமைச்சரிடம் இருந்து பேப்பர்களை பிடுங்கி கிழித்து எறிந்தும் அமளி செய்கின்றனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று அவை மீண்டும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி அமளி செய்தனர். மாநிலங்களவையில், எதிர்கட்சி எம்பிக்கள் சிலர் இதுவரை இல்லாத வகையில், எம்பிக்கள் சிலர் அவையின் நடுவில் உள்ள அதிகாரிகளின் மேஜைகளின் மேல் ஏறி நின்றனர். சிலர் மேஜை மீது அமர்ந்து கொண்டு கறுப்புத் துணிகளை வீசியும் கோப்புகளை தூக்கி எறிந்தும் ரகளையில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாதாரண கட்சித்தொண்டனைப் போல எம்.பி.க்கள் மேஜைமீறி ஏறி அநாகரிக செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், பாராளுமன்றத்தின் மாண்பையும் குழிதோண்டி புதைத்துள்ளது.
இந்த சம்பவத்தால் வேதனை அடைந்த ராஜ்யசபா அவைத்தலைவர் வெங்கையாநாயுடு, மேஜை மீது ஏறி நின்றது மற்றும் அமர்ந்து ஆவணங்களை வீசிய எம்பிக்களின் செயலால் மாநிலங்களவையின் புனிதம் சிதைக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். எம்பிக்களின் இந்த செயலை கண்டிக்கவோ அல்லது தனது அதிருப்தியை வெளிப்படுத்தவோ வார்த்தைகளே இல்லை என கண்ணீர் சிந்தினார்.
மேலும், எம்பிக்கள் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து நடந்து கொள்ள அவர்களை எது தூண்டியது என்பதற்கு தன்னிடம் விடை இல்லை என்றும் கூறியதுடன் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு எழுந்து சென்றார்.
மக்களவையிலும், எதிர்க்கட்சி எம்பிக்கள்ம் அமளி செய்ததால், அவை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.