டெல்லி: 12எம்பிக்கள் இடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாராளுமன்ற மேல்சபையில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்களை மேலவை தலைவர் வெங்கையா நாயுடு கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தவறுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்ததால், அவர்கள் 12 பேரும் இந்த குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க முடியாதவாறு, அவர்களின் சஸ்பெண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சி எம்.பிக்களின் கூட்டம் காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, ராஜ்யசபாவின் 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராஜ்யசபாவில் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். கூட்டம் நடத்தி எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார்.