சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று முற்பகல் சந்தித்து பேசினார். அப்போது, ஆளும் திமுக அரசு மீது புகார் கூறினர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று காலை 11.30 மணி அளவில் நேரில் சந்தித்து பேசினார். புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி ஆளுநரை தனியாக சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜூ, வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
அப்போது, ஆளுநரிடம் எடப்பாடி மனு ஒன்று வழங்கினால். அதில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையைக்கொண்டு ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி தலைமையிலான குழுவினர், ”அண்மையில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறோம். இந்த தேர்தலில் ஆளுங்கட்சி முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுகவினரை தோல்வியுற்றவர்களாக அறிவித்துள்ளனர். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சரியாக பணியாற்றவில்லை.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் வற்புறுத்தியிருக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவையும் கூட தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறினார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர் மீது அமைச்சரின் உதவியாளர் பொதுமக்கள் முன்னிலையில் காவலரை அடிக்கிறார். மக்களை பாதுகாக்கும் காவலருக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு எந்த நிலைமை என்பதை பார்க்க வேண்டும்”.
இவ்வாறு அவர் கூறினார்.