டில்லி

கொரோனா கட்டுப்படுத்தலுக்காகச் செயல்படுத்த வேண்டிய 9 அம்ச கோரிக்கைகளை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பிரதமருக்குத் தெரிவித்துள்ளன.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் தீவிரமடைந்து பாதிப்படைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த பரவலைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்களான தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மஜத கட்சி தலைவர் தேவே கவுடா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கடைப்பிடிக்க வேண்டிய அத்தியாவசியமான 9 அம்ச கோரிக்கைகளை அவர்கள் தெரிவித்துள்ளனர்.   அவை பின் வருமாறு :

”சர்வதேச மற்றும் உள்ளூரில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தடுப்பூசிகளை, மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும். நாடு முழுதும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும்

உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க லைசென்ஸ் வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும்

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட, 35 ஆயிரம் கோடி ரூபாயை, தடுப்பூசிக்காக பயன்படுத்த வேண்டும்

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தை நிறுத்தி வைத்து, அந்தத் தொகையை, ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிக்குப் பயன்படுத்த வேண்டும்

‘பிஎம்கேர்ஸ்’ நிதியில் உள்ள இதுவரை கணக்குக் காட்டப்படாத தொகையை முழுமையாகப் பயன்படுத்தி, தடுப்பூசி, ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும்

வேலையில்லாதோருக்கு, மாதம், 6,000 ரூபாய் வழங்க வேண்டும்

தேவைப்படும் அனைவருக்கும் உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், விவசாய சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.”

எனக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.