சென்னை:
கொரோனா லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார்.

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது,   தளர்வுகள் அறிவிப்பது  தொடர்பாகவும்,  தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் விதிப்பது குறித்தும்,  பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்குவது, பொது போக்குவரத்து தொடங்கலாமா என்பது  தொடர்பாகவும், தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும்,  சென்னையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும்,  சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கூறியதாவது,

 கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு  பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .  வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் அரசே கட்டணம் செலுத்துகிறது.
தமிழகம் முழுவதும் 73% பேர் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் 81,530 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 84.5% பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நோய் தொற்று எண்ணிக்கை 2,27,688, சென்னையில் 96,438 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
தேவையான மருத்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அதிக அளவிலான பரிசோதனை மையங்கள் உள்ளன.
ஜிங்க் வைட்டமின் மாத்திரைகள்  மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னை வாழ் மக்களுக்கு 46 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
3,962 ஐசியு படுக்கைகள், 2,882 வெண்டிலேட்டர்கள் உள்ளன; தேவையான மருந்துகள்  கொள்முதல் செய்யப்படுகிறது.
ஊரடங்கு காலத்தில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
4.18 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வந்தே பாரத், சமுத்திர சேது திட்டங்கள் மூலம்  வெளிநாடுகளில் இருந்து 51,000 பேர் அழைத்து வரப்பட்டுள்ளன என்றார்.
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 46 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன

உயிர்காக்கும் மருந்துகள் தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.