சென்னை,
கிட்னி, கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜனுக்கு நேற்று கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது நடராஜன் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகம் செயல் இழந்ததால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ரேலா உள்ளிட்ட டாக்டர்கள் அவரை கண்காணித்து வந்தார்கள். மேலும், அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுசீரகம் தானமாக பெறுவதற்காக தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தஞ்சாவூரில் மூளைச்சாவு அடைந்த கார்த்தி என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாக கூறப்பட்டது. அதையடுத்து அவரை சென்னைக்கு கொண்டு வந்து அவரது கிட்னி மற்றும் கல்லீரல் நடராஜனுக்கு பொருந்துமா என்பது குறித்து , பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமன மருத்துவர்கள் ஆய்வுகள் செய்தனர்.
இதில், கார்த்தியின் உடல் உறுப்புகள் நடராஜனுக்கு ஒத்துப்போனதால் நேற்று பிற்பகல் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அதைத்தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவில் நடராஜன் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் இன்று காலை நடராஜனை வைகோ மற்றும் திருமாவளவன் மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.