அகமதாபாத்,

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறா குஜராத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.

22 ஆண்டுகாலம் குஜராத்தை தனது கட்டுப்பாட்டுக்கு வைத்திருந்த பிரதமர் மோடி, தற்போது ஆட்சியை பிடிக்க போராடி வருகிறார். குஜராத்தில் பாஜகவை காங்கிரஸ் விரட்டிக்கொண்டே வந்துகொண்டிருக்கிறது.

குஜராத் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் ஜனவரி 22, 2018 அன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், குஜராத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பை  கடந்த அக்டோபர் மாதம் 25ந்தேதி, தலைமை தேர்தல் அதிகாரி  அறிவித்தார். அதன்படி, 182 சட்டப்பேரவை தொகுதிகளை உடைய  குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுவதாக அறிவித்தார்.

முதல் கட்டமாக டிசம்பர் 9ந்தேதி 89 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 14ந்தேதி 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு  நடைபெற்றறது.

இன்று  (டிசம்பர் 18ந்தேதி)  வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

குஜராத்தை ஆட்சி செய்த வந்த மோடி, பிரதமராக பதவி ஏற்றதை தொடர்ந்து குஜராத் மாநில முதல்வராக ஆனந்தி பெண் பதவி வகித்தார். அவர் விலகியதை தொடர்ந்து தற்போது விஜய்ருபானி முதல்வராக இருந்து வருகிறார்.

இதற்கிடையில், பசுவதை, பட்டேல் இனத்தவர்களின் போராட்டம் மற்றும் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் குஜராத்தில் பாஜக அரசு மீது பொதுமக்களிடையே வெறுப்பு வளர்ந்து வந்தது. இதன் காரணமாக குஜராத்தில் பாஜக இழந்த செல்வாக மீட்க கடுமையாக போராடி வந்தது. பல சலுகைகளை அறிவித்தது.

இந்நிலையில், குஜராத் மாநில தேர்தல் தேதி அறிவிக்க தேர்தல் கமிஷன் தாமதம் செய்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய  இரண்டு மாநில சட்டமன்ற காலமும் வரும் ஜனவரியில் முடிவடை யும் நிலையில், இமாச்சலுக்கு தேர்தல் தேதி அறிவித்த தேர்தல் கமிஷன், குஜராத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செய்லபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேறகொண்டு. மக்களின் ஆதரவை பெற்று வந்தார். மேலும் அவருக்கு பட்டேல் சமூகத்தினரின் ஆதரவும் கிட்டி உள்ளது.

இதன் காரணமாக  ஆட்சியை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் மோடியும் குஜராத்துக்கு வருகை தந்து பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் குஜராத்தில் முகாமிட்டனர்.

அதே வேளையில் காங்கிரஸ் தலைவர்களும் முகாமிட்டு தேர்தலில் சூறாவளி பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற பாகிஸ்தான் உதவி செய்வதாக மோடி தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது.

மோடி பலமுறை குஜராத்துக்கு விசிட் செய்து  சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.  150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம் என்று மோடி பிரசாரம் செய்தார்.

ஆனால் ராகுல்காந்தியோ  மக்கள் செல்வாக்கு தங்களுக்கே என்றும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் சமீபத்தில் வெளியாகி கருத்துக்கணிப்பின்போது, பாஜ, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒரே அளவிலான சமபலத்துடன் இருப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பரபரப்பான குஜராத சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவு பெற்று தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இன்றைய வாக்குப்பதிவின்போது, பாஜக வை தொடர்ந்தே காங்கிரசும் வந்துகொண்டிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே சுமார் 25 தொகுதிகளே வித்தியாசம் வரும் நிலையிலேயே தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றாலும், அது மோடிக்கு கிடைத்த வெற்றியாக கருத முடியாது. உண்மையில் அது காங்கிரசுக்கே வெற்றி என்று கருதப்படும்.

உண்மையில் சொல்லப்போனால் மோடி அரசு செய்த அறுவை சிகிச்சை வெற்றிரகரமாக நடைபெற்று முடிந்தது. ஆனால், நோயாளி மரணத்தை தழுவியது போல தற்போதைய தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

குஜராத்தில் கடந்த 2012ம் ஆண்டு தேர்தலின்போது, பாரதியஜனதா  115 தொகுதிகளும், காங்கிரஸ் 61 தொகுதிகளும் தேசியவாத காங்கிரஸ் 2, கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்தன் கட்சிக்கு 3, மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.