டெல்லி: ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் ஈரான், இஸ்ரேல் நாடுகளில் இதுந்து இதுவரை 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதுவரை 19 சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

ஜூன் 18 ஆம் தேதி தொடங்கிய இந்த நடவடிக்கை, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு நிலைமைக்கு பதிலளிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஈரானில் இருந்து 3,597 பேரும் இஸ்ரேலில் இருந்து 818 பேரும் என மொத்தம் 4,415 இந்தியர்கள் 19 சிறப்பு வெளியேற்ற விமானங்களைப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்டனர், இதில் மூன்று இந்திய விமானப்படை (IAF) C-17 விமானங்கள் அடங்கும்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அங்கு வசித்து வந்த த இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆபரேசன் சிந்து என்ற பெயரில், அங்குள்ள இந்தியர்களை அழைத்து, மத்திய அரசு கடந்த 18-ம் தேதி நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கு ஈரானும் ஒத்துழைப்பு வழங்கி வானிவெளியை உபயோகிக்க அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து, இதுவரை 19 சிறப்பு விமானங்களில், 4,400-க்கும் அதிகமான இந்தியர்களை இந்தியா மீட்டுள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, ஆபரேஷன் சிந்துவின் ஒரு பகுதியாக 3 இந்திய போர் விமானங்கள் உள்பட 19 சிறப்பு விமானங்கள் மூலம் மொத்தம் 4,415 இந்திய நாட்டினர் (ஈரானில் இருந்து 3,597 பேர் மற்றும் இஸ்ரேலில் இருந்து 818 பேர்) இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். 9 நேபாள நாட்டினர், 4 இலங்கை நாட்டினர் மற்றும் ஒரு இந்திய நாட்டவரின் ஈரானிய மனைவி ஆகியோர் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் உதவிய எகிப்து மற்றும் ஜோர்டான் அரசாங்கத்தின் ஆதரவுக்கு நன்றி கூறுகிறோம்.
இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் எகிப்தில் உள்ள இந்திய தூதரகங்கள் டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்துடன் மிகவும் நெருக்கமாக ஒத்துழைத்தன. இந்தியர்களை வெளியேற்றுவதற்காக தங்கள் வான்வெளியைத் திறந்தனர். இந்த சிறப்புச் செயலுக்கு ஈரான் அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் கள நிலைமையை மத்திய அரசு மதிப்பிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இந்திய குடிமக்களைத் தவிர, 14 வெளிநாட்டு இந்திய குடிமக்கள் (OCI) அட்டைதாரர்கள், 9 நேபாள நாட்டவர்கள், 4 இலங்கை நாட்டவர்கள் மற்றும் ஒரு இந்திய நாட்டவரின் ஈரானிய மனைவி ஆகியோரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் 1,500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 500 குழந்தைகள் அடங்குவர், இது பணியின் மனிதாபிமான தன்மையையும் அவசரத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.