சென்னை: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்ட நிலையில் 40 நாட்களுக்கு பிறகு நாளை (பிப்ரவரி 1ந்தேதி)  மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட வுள்ளன.   இதன் காரணமாக   பள்ளிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் தூய்மை பணிகள் விரைவாக மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை எனவும்  நேரடி அல்லது ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வழிகாடு நெறிமுறைகளை  பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார். அதில்,

பள்ளிக்கு வரக்கூடிய 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

உணவருந்தும் இடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்களில் நோய் தொற்று பரவாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முகக் கவசம் அணிதல் தனிமனித இடைவெளி, கிருமிநாசினி கொண்டு வகுப்பறை சுத்தம் செய்யப்பட வேண்டும் உள்பட  அன்றாட வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.