சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு, தளர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து, தமிழகஅரசு இன்று அறிக்கை வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் தியேட்டர்கள் திறப்பது குறித்து தமிழகஅரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட பல்வேறுகட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகள் அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. இதற்கிடையில், மத்தியஅரசு, தற்போதைய நிலையே நவம்பர் மாதத்துக்கும் தொடரும என அறிவித்து உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில், நவம்பர் மாதத்துக்கான ஊரடங்கு மற்றும் தளர்வுகள் தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு இன்று மாலைக்குள் வெளியிடும் என கூறப்படுகிறது.
கடந்த 28ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தெந்த மாதிரியான தளர்வுகள் வழங்கலாம் என்பது பற்றி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு ஆகியவற்றுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியிருந்தார். மேலும் தமிழகத்தில் தொற்று பரவலும் குறைந்து வருகிறது. இந்த நிலையில், மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை தியேட்டர்கள், பூங்காக்கள், கடற்கரை, கேளிக்கை பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் போன்றவை திறக்க அனுமதிக்கப்படாத நிலையில், நவம்பர் மாதம் முதல் தியேட்டர்களில் உள்ளிட்ட இந்த இடங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதேநேரம், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.