சென்னை: பொறியியல் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள், புத்தகத்தை பார்த்தும் எழுதலாம், இணையத்தையும் பயன்படுத்தலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், உயர்கல்வி நிறுவனங்களில், கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுகளாக பெரும்பாலான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது மீண்டும் தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், அதை கட்டுப்பபடுத்த தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதேன்படி, நாளை (20.04.2021) முதல் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தேர்வுகளை மத்திய மாநில அரசுகள் ஒத்திவைத்து வருகின்றன. தமிழகத்தில் கூட 12ஆம் வகுப்பு தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் தேர்வும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
ஏற்கனவே கடந்த ஆண்டு முதல், பொறியியல் செமஸ்டர் தேர்வு மற்றும்அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்திய அண்ணா பல்கலைகழகம் மாணாக்கர்களுக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்தது. இதுமட்டுமின்றி, தேர்வு எழுதியவர்களில் 99 சதவிகிம் பேரை தேர்ச்சி பெறவில்லை என்று அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணமாக, தேர்வு எழுதும்போது, மாணாக்கர்கள், அங்கும் இங்கும் பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் இனிமேல் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
அதன்படி, மாணவர்கள் இணையதளத்தில் தோன்றக் கூடிய கேள்விகளுக்கு, ‘பேப்பர் – பென்’ என்ற முறையிலேயே தேர்வுகளை எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்படும். இந்த முறை மாணவர்கள் சிந்தித்து பதிலளிக்கும் வண்ணம் தான் கேள்விகள் இடம்பெறும் என்றும், இதற்காக மாணவர்கள் புத்தகத்தை பார்த்தும் எழுதலாம், இணையத்தையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஒருவரி கேள்விகள் போல இல்லாமல், விரிவாக பதிலளிக்கும் வண்ணம் கேள்விகள் இருக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.