டில்லி

செலவை கட்டுப்படுத்த, உள்நாட்டு விமான எகானமி வகுப்பு பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம், தற்போது பயணிகளின் உணவுக்காக வருடத்துக்கு சுமார் ரூ.400 கோடி செலவழிக்கிறது.  இந்த செலவை குறைக்க உள்நாட்டு பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் வருடத்துக்கு ரூ. 8 கோடி வரை மிச்சப்படுத்தலாம் என தெரிய வருகிறது.

அதே நேரத்தில் உள்நாட்டு பிசினெஸ் வகுப்பு பயணிகளுக்கும், வெளிநாட்டு அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சைவம், அசைவம் இருவகை உணவுகளும் அளிக்கப்படும் என தெரிகிறது.

இது பற்றி ஏர் இந்தியாவின் ஒரு அதிகாரி கூறியதாவது :

”தற்போது செலவைக் குறைக்கவும், வீணாவதை தடுக்கவும் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.   பல பயணிகளும் சைவ உணவையே தெரிந்தெடுக்கிறார்கள்.  அதனால் அசைவ உணவுகள் பெருமளவில் வீணாகிறது.  தவிர பயணிகளில் பலர் தங்களின் விருப்ப உணவை சொல்லாததால் இரு வகை உணவுகளையும் எடுத்துச் சென்று அதிக அளவில் உணவு வீணாகிறது. அது மட்டுமின்றி சில வேளைகளில் தவறுதலாக சைவ உணவு கேட்போருக்கு அசைவ உணவு தரப்படுகிறது, ஆனால் சைவ உணவு மட்டுமே அளிக்கப்படும் எனில் தவற வாய்ப்பே இல்லை” எனக் கூறினார்.

அகில இந்திய விமானப் பயணிகள் சங்கத் தலைவர் மகேஷ் ரெட்டி, “இது போல ஒரு நடவடிக்கையை தன்னிச்சையாக ஏர் இந்தியா எடுத்துள்ளது.   குறைந்த கட்டணம் செலுத்தும் பயணிக்கும் தன் உணவை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.  இது போல சட்டென்று முடிவெடுக்காமல், அனைத்து பயணிகளிடமும் ஒரு சர்வே நடத்தி இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

போன வருடத்திலிருந்தே ஏர் இந்தியா நிறுவனம் இந்த நடவடிக்கைகளை அறிவிப்பில்லாமலே ஆரம்பித்து விட்டதாக சில பயணிகள் தெரிவித்துள்ளனர்