கோவாவில் இந்த மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை சர்வதேச திரைப்பட விழா நடக்க உள்ளது. இந்த 48ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் பல உலக மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இது தவிர இந்தியன் பனோரமா என்னும் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.
இந்த ஆண்டு இந்தப் பிரிவில் மொத்தம் 26 படங்கள் திரையிடப் பட உள்ளன. இதில் 9 மராத்தி, 6 இந்தி, 2 தெலுங்கு மற்றும் உள்ள மொழிகளில் பாக்கிப் படங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. தமிழில் இருந்து ஒரே ஒரு படம் மட்டும் தேர்வாகி உள்ளது. இதே போல கன்னடம், கொங்கணி, அசாமி, மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளில் இருந்தும் ஒரே படம் மட்டும் தேர்வாகி உள்ளது. பிரதான திரைப்பட வரிசையில் பாகுபலி 2 தெலுங்குப் படம் தேர்வாகி உள்ளது.
இந்த விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம் அம்ஷன் குமார் இயக்கத்தில் உருவான மனுசங்கடா என்னும் திரைப்படம் ஆகும். அம்ஷன் குமார் இயக்கியுள்ள் ஆவணப் படங்கள் பல அவருக்கு புகழைத் தேடித் தந்துள்ளன. அவர் இயக்கியுள்ள இந்த மனுசங்கடா என்னும் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்டுள்ளது. சாதி பிரச்னையால் நிகழும் சீர்கேடுகளும், அதற்கு நியாயம் கிடைக்கிறதா என்பதையும் சொல்லும் ஒரு படம் மனுசங்கடா திரைப்படம். இந்த திரைப்படம் ஏற்கனவே மும்பை திரைப்பட விழாவில் திரையிட்ட போது பல ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.