சென்னை,
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை திமுகவிற்கே உண்டு என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததை தொடர்ந்து, தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய விசாரணைக் குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதுடன் டெபாசிட்டையும் இழந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 29ந்தேதி கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், சட்டத்துறை இணைச் செயலாளர் கண்ணதாசன் ஆகியோர் இணைந்த குழு வரும் 31ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்நிலையில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உள்ளதாக ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுகவைப் பற்றி அவதூறு பரப்புவோர் அவமானப்படுவது நிச்சயம் என்றும் டிடிவி தினகரன் வெற்றிக்கு திமுக உதவியதாக அவதூறு பரப்புவோருக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்கேநகர் இடைத் தேர்தலில் ஜனநாயகம் புதைக்கப்பட்டு பணநாயகம் கோலோச்சியது என்றும் பணநாயகத்துக்கு ஆர்.கே.நகர் தொகுதி பலியானதாகவும் , மேலும் அதிமுக இருதரப்பு வேட்பாளர்களும் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி ஜனநாயகத்தை விலைபேசினார் என்றும் அவர் கூறி உள்ளார்.