சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக நடக்கும் சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 329 ரன்கள் சேர்த்தது. ஆனால், அந்த ரன்கள் 3 பேட்ஸ்மென்களால் மட்டுமே வந்தது என்பது கவனிக்கத்தக்கது.
சேப்பாக்கம் மைதானம் பந்துவீச்சுக்கு ஏற்றதாக மாற்றப்பட்ட நிலையில், பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகின மற்றும் ஸ்விங் ஆகின. குறிப்பாக, சுழலுக்கு மிகச் சிறப்பாக ஒத்துழைத்து. எனவே, இந்திய விக்கெட்டுகள் சரசரவென்று விழத்தொடங்கின.
ஷப்மன் கில் மற்றும் விராத் கோலி என்ற 2 முக்கிய பேட்ஸ்மென்கள் டக் அவுட். பின்வரிசையில் இஷாந்த் ஷர்மா மற்றும் குல்தீப் டக்அவுட். ரவிச்சந்திரன் அஸ்வின்(13), புஜாரா(21) ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். அக்சார் படேல்(5) மற்றும் சிராஜ்(4) இருவரும் ஒற்றை இலக்க ரன்கள்.
இந்நிலையில், 329 ரன்களை இந்திய அணி எட்டக் காரணம் 3 பேட்ஸ்மென்கள் மட்டுமே. துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 161 ரன்களை குவிக்க, அவருக்கு துணையாக நின்ற ரஹானே 67 ரன்களை சேர்த்தார்.
இவர்கள் இருவரும்தான், இந்திய அணியின் எண்ணிக்கை 250ஐ தாண்டுவதற்கு காரணமானார்கள். கடைசிநேரத்தில், நேர்மறை எண்ணத்துடனும் துணிச்சலுடனும் ஆடிய ரிஷப் பன்ட், 58 ரன்களை விளாசினார்.
இந்த 3 பேட்ஸ்மென்களால்தான் இந்திய அணி, சேப்பாக்கம் மைதானத்தில் சவாலான இலக்கை எட்டியது என்பது கவனிக்கத்தக்கது.