சென்னை: ஆன்லைன் ரம்மியால் ஏமாந்து பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலை தொடர்கிறது. இந்த நிலையில், சென்னையில் மேலும் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் இழந்து தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழ்நாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை 25-க்கும் அதிகமாகும். இதைத்தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தடையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதனால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்கிறது.
இந்த நிலையில், சென்னை போரூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் பணம் இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனியார் நிறுவன முன்னாள் ஊழியர் பிரபு (39) என்பர் ஆன்லைன் ரம்பி மோகத்தில் தான் சம்பாதித்த அனைத்து பணத்தை இழந்து விட்ட நிலையில், இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.