திருவாரூர்:  ஆன்லைனில் ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கிய இளைஞர், அந்த நிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்பட டிஜிட்டல் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஸ்பீட் லோன் ஆப் உள்பட ஏராளமான லோன் ஆப்கள்  மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பணத் தேவைகளுக்கான இன்றைய இளைய தலைமுறையினர், பின்விளைகள் குறித்து சிந்திக்காமல் ஆன்லைன் மூலம் கடன்களை பெற்று பெரும் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியுள்ளார். கடனை குறித்த காலத்தில் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படும் நிலையில், மீண்டும் பணம் கேட்டு லோன் கொடுத்த நிறுவனம் மிரட்டியுள்ளது. பெற்ற கடனை இன்னமும் செலுத்தவில்லை என்றும் உடனடியாக ரூ. 8400 செலுத்தவில்லை என்றால் உங்களது போட்டோவை நிர்வாணமாக மார்பிங் செய்து அதனை, உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் ஷேர் செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். ஆனால், அதை  ஏற்க ராஜேஷ் மறுத்துள்ள நிலையில்,  ராஜேஷின் புகைப்படங்களை நிர்வாணமாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மார்ஃபிங் செய்து அனுப்பியுள்ளது.

இதனாம் மனம் உடைந்த ராஜேஷ்,   வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குறித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வலங்கைமான் போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.