டில்லி
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதாவிடம் ஆன்லைன் மூலம் ரூ.34000 மோசடி நடந்துள்ளது.
சமீபகாலமாக ஆனலைனில் பொருள் வாங்குவதாக இருப்பினும் விற்பதாக இருப்பினும் மிகவும் கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் முகம் தெரியாதவர்களுடன் பண விவகாரம் நடத்தும் போது எச்சரிக்கை மிக அதிக அளவில் தேவைப்படுகிறது. எவ்வளவு எச்சரிக்கையுடன் இருந்தாலும் இந்த சைபர் கிரைம் மோசடிகளை நடத்தப் பல மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மோசடி கும்பல்கள் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அவ்வகையில் டில்லி மாநில முதல்வர் மகள் ஹர்ஷிதா ஒரு பழைய சோபாவை விற்கப் பிரபல இணைய தளமான ஓ எல் எக்ஸ் தளத்தில் விளம்பரம் அளித்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பல் சோபாவை வாங்க முன் வந்துள்ளனர். இதில் ஹர்ஷிதா நம்பிக்கையைப் பெற அவரது வங்கிக் கணக்கில் சி|றிய அளவு பணத்தை முன்பணமாகச் செலுத்தி உள்ளார்.
அதன் பிறகு கியூ ஆர் கோட் லின்க் ஒன்றை அனுப்பி வைத்து அதன் மூலம் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.34000 பணத்தை எடுத்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஹர்ஷிதா இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு மாநில முதல்வர் மகளிடமே இத்தகைய மோசடி நடந்துள்ளது கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.