சென்னை:
ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக மத்தியஅரசுக்கு ஜூலை 6 வரை அவகாசம் அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், பல பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கல்வி போதித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில், ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைனில் கற்பிக்கவும் தடை விதிக்க வேண்டும், 6 முதல் 12ம் வகுப்பு வரை நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது, ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, மாணவர்க ளுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஜூலை 6 வரை அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டது.