சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல தனியார் கல்வி நிலையங்கள் இணையதளம் வாயிலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதை தடை செய்யக் கோரிய வழக்கில், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து பதில் அளிக்க சென்னை கண் மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. மீண்டும் திறப்பது எப்போது என்பது குறித்து உறுதியான தகவல்களை மத்திய மாநில அரசுகள் அறிவிக்காத நிலையில், பல தனியார் பள்ளிகள், நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக நடத்தி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில், ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைனில் கற்பிக்கவும் தடை விதிக்க வேண்டும், 6 முதல் 12ம் வகுப்பு வரை நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகளின் போது மடிக்கணினி மற்றும் மொபைல் போன் திரைகளில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சுகள் நீண்ட நேரமாக வெளிப்படுவதால் குழந்தைகளின் கண்களுக்கு ஏற்படக்கூடிய சிரமம் குறித்து சென்னை அரசு கண் மருத்துவமனையின் டீன் விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறறுத்தி உள்ளது.
முன்னதாக ஆன்லைன் வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.