சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்புக்கு வரும் 12ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி. எஸ்சி) (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 480 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
திருவள்ளூா் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கிறது. இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
ஓசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில், அறிவியல் பல்கலைக்கழகம் & இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் ( BVSc & AH / B.Tech., ) சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Bachelor of Veterinary Science & Animal Husbandry – B.V.Sc & AH (5 ஆண்டுகள் ),
B.Tech., Food Technology (4 ஆண்டுகள் ), B.Tech., Poultry Technology (4 ஆண்டுகள் ),
B.Techm, Dairy Technology (4 ஆண்டுகள்)
என்ற 4 வகையான படிப்புகளில் சேர https://adm.tanuvas.ac.in இணையதளம் வாயிலாக வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அயல் நாடுகளில் வாழ் இந்தியர்கள் (NRIs) அயல்நாடுகளில் வாழும் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs), அயல்நாடுகளில் வாழும் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
உயிரியல், தாவரவியல் அல்லது விலங்கியல், இயற்பியல் வேதியியல் ஆகியவற்றுடன் பொதுப் பாடப்பிரிவில் உயர்நிலைப் படிப்பை முடிக்கும் மாணவர்களும் (10+2) தொழிற்கல்வி தொடரில் விவசாயப் பயிற்சிகள் / பால் பண்ணை / கோழிப்பண்ணை படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், குறைந்தபட்ச மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடுகள் தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி அமையும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.