சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஜூன் 22-ம் முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து உள்ளது.

ஏற்கனவே ஜூன் 27-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 22-ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்‌ உள்ள 163 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்‌ சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை https://tngasa.org/, https://tngasa.in/என்ற இணையதள முகவரிகளில்‌ பதிவு செய்யலாம்‌ என  கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 7-ஆம் தேதி கடைசி நாளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும்‌ போதிய அளவில்‌ கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விண்ணப்பக்‌ கட்டணம்‌ – ரூ.48/, பதிவுக்‌ கட்டணம்‌ – ரூ.2.  எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்‌ கட்டணம்‌ ஏதுமில்லை. பதிவுக்‌ கட்டணம்‌ – ரூ.2/- மட்டும்‌ செலுத்த வேண்டும்.

விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ மூலம்‌ இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்‌.