இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வெங்காயம் மற்றும் பூண்டின் விலை கடந்த சில நாட்களாக சென்செக்ஸ்-க்கு சவால் விடும் வகையில் உயர்ந்து வருகிறது.

டெல்லி, மும்பையில் ஒரு கிலோ ரூ 80க்கும் சென்னையில் ஒரு கிலோ ரூ 75 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை அடையும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ ஒன்றுக்கு ரூ.40-60ல் இருந்த வெங்காய விலை தற்போது ரூ.70-80 ஆக உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு கிலோ ரூ. 75க்கு விற்பனையாகிறது.

கிடங்குகளில் இருந்து மண்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெங்காயம் வரத்து நின்று போன நிலையில் சென்னை போன்ற நகரங்களில் உள்ள மொத்த வியாபாரிகள் கர்நாடகாவின் பெல்லாரி உள்ளிட்ட இடங்களில் இருந்து நேரடி கொள்முதல் செய்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக விளைச்சல் குறைவாக இருப்பதை அடுத்து பெல்லாரி வெங்காயத்தின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், இங்கிருந்து மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பிற இடங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் வெங்காயம் அனுப்பி வைக்கப்படுவதை அடுத்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விலையேற்றம் காரணமாக விற்பனையில் குறைவு காணப்பட்டாலும், உள்ளூர் உணவுகளில் வெங்காயம் இன்றியமையாததாக இருப்பதால், வெங்காயம் இன்னும் வாங்கப்படுகிறது.

இருந்தபோதும் பங்கு சந்தையை வேடிக்கை பார்ப்பது போல் வெங்காய விலை எப்போது குறையும் என்று பொதுமக்கள் ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.