திருவாரூர்;

திருவாரூர் அருகே உள்ள கமலாபுரத்தில் ஓஎன்ஜிசி  குழாய் உடைந்து, கச்சா எண்ணை விவசாய நிலங்களில் பரவியதால் சுமார் 1 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

டெல்டா மாவட்டமான தஞ்சை அருகே உள்ள திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, குடவாசல், கோட்டூர் ஒன்றிய பகுதி களில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில்  கச்சா எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் அருகே உள்ள எருக்காட்டூர் பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு, குழாய்கள் மூலம் வெள்ளக்குடி பகுதியில் உள்ள சேகரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள  கமலாபுரத்தில்  தனசேகரன் என்பவரது விவசாய நிலத்தின் அடியில் சென்ற  ஓஎன்ஜிசி குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி விளைநிலங்களில் பரவி நாசமாக்கியது.

சுமார் 1 ஏக்கர் அளவிலான விவசாய நிலத்தில் கச்சா எண்ணெய் தேங்கியுள்ளதால், அந்த பகுதியில் இனிமேல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள்,குழாய் உடைப்பை சரி செய்து, விவசாய நிலங்களில் இருந்து கச்சா எண்ணையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.