சென்னை: இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. அதற்காக 36 OneWeb செயற்கைக்கோள்கள் இஸ்ரோவுக்கு வந்துள்ளது. இவற்றை விண்ணில் செலுத்த GSLV Mk-III வாகனம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 22ந்தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டள்ளது.
தற்போது, செயல்பாட்டில் உள்ள பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 1,750 கிலோ எடை கொண்ட செயற்கை கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த முடியும். ஆனால், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ எடை வரை உள்ள செயற்கை கோளை செலுத்தலாம். இதனால், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கை கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.
ஏற்கனவே இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்துடன் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (New Space India Limited) நிறுவனம் 2 ராக்கெட் ஏவுதலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் அக்டோபர் 22-ம் தேதி ஏவப்பட உள்ளன.
இதற்காக இங்கிலாந்தில் இருந்து ஒன்வெப் நிறுவன செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை ராக்கெட் பாகத்துடன் பொருத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. இதையடுத்து, 2-வது கட்டமாக, ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக் கோள் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 23-ம் தேதி செலுத்தப்பட இருப்பதாகவும், இதற்கிடையில், 3 பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுமட்டுமின்றி, 10 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களின் உரிமை, என்எஸ்ஐஎல்-க்கு மாற்றப்பட இருப்பதாகவும், அவற்றின் சேவையை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்ட மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.