டேராடூன்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதைத் தாண்டியவர்களுக்குத் தடுப்பூசி போடுவது ஒரு வாரம் தாமதம் ஆகும் எனத் தெரிய வந்துள்ளது.
நாடெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி மூன்றாம் கட்டமாக நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே இரண்டாம் டோஸ் போட வேண்டியவர்களுக்கே போதிய தடுப்பூசிகள் எந்த மாநிலத்திலும் இல்லை என்பதே உண்மையாகும். பல மாநிலங்களில் இதையொட்டி கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் மேலும் கோடிக் கணக்கானோருக்கு தடுப்பூசி போட மருந்து இல்லாத நிலை உள்ளது.
இதையொட்டி உத்தரகாண்ட் மாநில சுகாதார செய்ல்கர் அமித் நேகி, “மத்திய அரசு சுமார் 1,2,000 டோஸ்கள் கோவிஷீல்ட் மற்றும் 42,000 டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசிகளை உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அளித்துள்ளது. இவை 45 வயதுக்கு அதிகமானோருக்காக ஒதுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் ஆகும்.
மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கவேண்டிய கொரோனா தடுப்பூசியை விரைவில் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போதுமான அளவு கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைத்த பிறகு மே மாத முதல் வார இறுதியில் இந்த பணிகள் தொடங்கலாம்.” என அறிவித்துள்ளார்.