சேலம்: 2019 தேர்தலை விட ஒரு சதவீதம் கூடுதல் வாக்கு இந்த தேர்தலில் கிடைத்துள்ளது, இது அதிமுகவுக்கு வெற்றியே”, திமுகவின் வாக்கு சதவிகிதம்தான் குறைந்துள்ளது என்றவர், அண்ணாமலை போன்றவர்கள் பாஜகவில் இருந்தால் அக்கட்சி தோற்கத்தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு அதிமுக பிரிந்து போட்டியிட்டதும், பாஜகவுடனான கூட்டணியை முறிந்ததுமே காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அதிமுக, பாஜக தலைவர்களிடையே வாக்கு சதவிகிதங்களை காரணம் காட்டி விமர்சனங்கள் நடைபெற்று வருகின்றன.
2024 மக்களவை தேர்தலில் அதிமுக 20.46% வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில் 30.28 வாக்குகளை பெற்ற நிலையில், தற்போது பெரும் சரிவை கண்டுள்ளது. அதே நேரத்தில் இந்த தேர்தலில் பாஜக 11.24% வாக்குகளை பெற்று, தனது அஸ்திவாரத்தை பலப்படுத்தி உள்ளது. அதுபோல பல இடங்களில் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்தவரை பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து பாஜக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தனர். பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். திமுக கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தமிழகம் முழுவதும் அவர்களது கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி ரோடுஷோ மேற்கொண்டார். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், அதிமுக சார்பில் நான் ஒருவன் தான் எங்களது கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். தேர்தலில் அதிமுகவின் கூட்டணி பலம் உள்ளிட்டவை குறித்து அவதூறு பிரச்சாரங்கள் அதிகமாக வெளியிடப்பட்டன. மக்களை குழப்பும் விதமாக தேர்தல் உக்திகளை எதிரிகள் கையாண்டார்கள்.
இவ்வளவுக்கும் இடையேயும் அதிமுக இந்த தேர்தலை சந்தித்து 2019 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட ஒரு சதவீதம் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளது. இது அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன். இன்றைக்கு வாக்கு சதவீதத்தை வைத்து பாஜக வளர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்.
2014ல் பாஜக கூட்டணி வைத்து போட்டியிட்டது. அப்போது பாஜக கூட்டணி 18.80 சதவீத வாக்குகள் பெற்றது. 2024ல் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 18.28 சதவீதம். 0.62 சதவீதம் வாக்குகள் குறைவாக தான் பெற்றுள்ளது. ஆக, பாஜக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றதாக தவறான செய்திகள் வெளியிடப்படுகின்றன.
திமுக, 2019ல் 33.52% வாக்குகள் பெற்றது. ஆனால் தற்போதைய தேர்தலில் 26.93% வாக்குகளே பெற்றது. 2019ல் வாக்குகளை விட இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளையும் ஒப்பிடும்போது அதிமுகவே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
இது நாடாளுமன்றத் தேர்தல். சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. மக்கள் பிரித்து பார்த்து தான் வாக்களிக்கிறார்கள். தமிழக மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள் எந்த தேர்தலுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என அவர்களுக்கு தெரியும். அவர்கள் பிரிந்து சென்றதால் தான் அதிமுகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு கூடுதலாக கிடைத்துள்ளது என்றார்.
அதிமுக ஒரு சில தொகுதிகளில் பின்னடைவு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டவர், அது சரி செய்யப்படும். அதிமுக இப்போதும் வளர்ந்துதான் வருகிறது. தேர்தலில் கூட்டணி இருந்திருந்தால், வந்திருந்தால் என்று பேச முடியாது. ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட கூட்டணிகள் இருக்கும். சூழ்நிலைக்கு தக்கவாறு வெற்றி, தோல்வி அமையும் என்றார்.
பாஜக ஏதோ வளர்ந்துவிட்டதுபோல செய்திகள் திட்டமிட்டு வெளியிடப்படுகிறது. 2014-ல் பாஜக கூட்டணி 18.8% வாக்குகள் பெற்றது, தற்போது 18.2% வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துவிட்டதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலை பொறுத்தவரை அதிமுகவின் வாக்கு சதவீதம் மட்டுமேஉயர்ந்துள்ளது. அதிமுகவின் வாக்குகள் மாறிவிட்டது என்கிறார்கள்; எங்கள் கட்சியின் வாக்கு எங்கும் செல்லவில்லை. தென்மாவட்டங்களில் அதிமுக வலுப்பெறும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் அதிமுக வென்றிருக்கும் என்ற எஸ்.பி.வேலுமணி பேச்சுக்கு எடப்பாடி மறைமுக எதிர்ப்பு தெரிவித்தவர், தேர்தலில் இருந்திருந்தால், வந்திருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்
இதையடுத்து அதிமுக இணைப்பு தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, ஓபிஎஸ் முடிந்துபோன கதை. இனிமேல் அவர்களை பற்றி பேசி என்ன பிரயோஜனம். முடிந்துபோனவற்றை பேச வேண்டிய அவசியம் இல்லை அதிமுகவில் பிளவு இல்லை. அதிமுகவை பற்றி பேச அண்ணாமலைக்கும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை.
திமுக அமைச்சர் ரகுபதிக்கு அடையாளம் கொடுத்தது அதிமுகதான். பின்புதான் அவர் திமுக சென்றார்.” என்று கூறியவர், சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிரியோடு சேர்ந்து குழப்பத்தை தொடர்ந்து விளைவிக்கிறார்கள்.
இவ்வாறு கூறினார்.
திமுக வாக்கு 6.6 சதவீதம் சரிவு: தமிழ்நாட்டில் கட்சிகள் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம்…