டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் உயர்மட்டக்குழுவின் தலைவரான முன்னாள் குடியரசு தலைவலர் ராம்நாத் கோவிந்த், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்றம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய பா.ஜ.க. அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஏனெனில், இதனால் வீண் விரையம் தவிர்க்கப்படுவதோடு, தேர்தல் அலுவலர்களின் நேரமும் மிச்சமாகும் என்பது மத்திய அரசின் எண்ணம்.
ஆகவே, ஒரே நாடு ஒரே தேர்தல் எந்தளவுக்கு சாத்தியம் என்பது குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றையும் மத்திய பா.ஜ.க. அரசு அமைத்தது.
இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷன் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இவர்களில் எதிர்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மட்டும் குழுவில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்து விட்டார். இக்குழு இதுவரை 2 முறை கூடி ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்து ஆலோசனை நடத்தியது.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாட்டு மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதேபோல, அரசியல் கட்சிகள் மற்றும் புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களிடமிருந்தும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கோரப்படுவதாக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பாக, உயர்மட்டக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, இன்று டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோர்லா ரோகினி மற்றும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து உயர்மட்டக் குழுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், “இந்த ஆலோசனை செயல்முறை வரும் நாட்களிலும் தொடரும். இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் ஏற்கெனவே கேட்கப்பட்டிருக்கின்றன.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் உட்பட புகழ்பெற்ற நீதிபதிகள், அரசியலமைப்பு வல்லுநர்கள் மற்றும் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உட்பட பலரிடம் கருத்துக் கேட்டு அணுகப்பட்டிருக்கிறது.
இக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 2 கூட்டங்களை நடத்தி இருக்கிறது. மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் தொடர்பு கொள்ளுமாறும் சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தது. பின்னர் கட்சிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி இருந்தது” .
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் அட்ட ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய நிலையில், பல்வேறு அமைப்பு மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், தற்போது சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.