டெல்லி: ஒரேநாடு ஒரேதேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அங்கீகரித்து மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இதன் காரணமாக, மத்தியஅரசு அதிமுக தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் அதிகரித்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு ஓபிஎஸ் வழக்குகள் தொடுத்துள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி, சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்று, அவரை கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், அற்போது, மத்திய சட்ட ஆணையமும் எடப்பாடியை அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது.
மத்தியஅரசு, பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டு வருகிறது. அதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதை பாஜக தனது தேர்ல் அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் பச்சைக்கொடி காட்டி உள்ளது. இது தொடர்பாக, மத்திய சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. மாநில அரசியல் கட்சிகளின் கருத்தையும் கோரியுள்ளது. மேலும், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கவும் சட்ட ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில், ஒரேநாடு ஒரேதேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணைய தலைவரும், நீதிபதியுமான ரிதுராஜ் அவஸ்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு, கட்சியின் கருத்தை தெரிவிக்கும்படி, கடிதம் அனுப்பி உள்ளார். அவரது கடிதத்தில், ‘பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, அரசியல் அமைப்பின் ஜனநாயக அடிப்படை கட்டமைப்பையோ அல்லது நாட்டின் கூட்டாட்சி அரசியலையோ எந்த வகையிலும் கெடுக்குமா? பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஏதேனும் ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் அந்த வரைவு அறிக்கை அரசியல் அமைப்பு திட்டங்களை மீறுவதாக உள்ளதா? ஆம் என்றால், எந்த அளவுக்கு? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
இதுதொடர்பான கருத்துகளை ஜனவரி 16-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் முறையில் 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.வில் யார் பெரியவர் என இபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல்கள் நீடித்து வரும் நிலையில், மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் என ஏற்று கடிதம் அனுப்பி உள்ளது, மத்தியஅரசு அதிமுகவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து உள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.