சென்னை

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி காவல்துறையினர் அவரை பிடிக்கத் தீவிரமாகக் களம் இறங்கினர். டில்லியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்தனர்.

பிறகு, சிபிசிஐடி காவல்துறை எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி ஜெயமோகன், ஆய்வாளர் குணவரதன் ஆகியோர் சிவசங்கர் பாபா தங்கியிருந்த கேளம்பாக்கம் ஆசிரமத்திற்கு அவரைக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இடையில் அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணையில் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையொட்டி அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.  சிவசங்கர் பாபா மீது இதுவரை 18 முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளதால் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுவந்தன.

நேற்று சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவின்கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நேற்று ஆலோசனை நடத்தி வந்தனர். ஏற்கனவே உள்ள 3 வழக்குகளில் இரண்டு வழக்குகள் போக்சோவில் பதிவான நிலையில், சட்ட வல்லுநர்களுடன் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  தற்போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதியப்பட்டு அவரை  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.