பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்..
பீகார் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் , அங்கு ராஷ்டிரிய ஜனதா தளம் ( ஆர்.ஜே.டி) தலைமையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி கூட்டணியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஆர்.ஜே.டி.கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் ஜெயிலில் உள்ளதால், அவர் மகன் தேஜஸ்வி யாதவ், கட்சி நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்கிறார்.
எதிர்க்கட்சிகள் அமைத்திருந்த ‘மகாபந்தனம்’’ கூட்டணியில் இருந்து அண்மையில் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா விலகி, முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் சேர்ந்துள்ளது.
இந்நிலையில் ’மகாபந்தனம்’ கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான ராஷ்டிரிய லோக்சமதா கட்சியும் விலக முடிவு செய்துள்ளது.
‘’மகாபந்தனம் கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை. எனவே கூட்டணி குறித்து இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் எங்கள் கட்சியின் செயற்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என லோக்சமதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
‘’உங்கள் கட்சி ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்குமா?’’ என்று கேட்டபோது ’’ அரசியலில் எதுவும் நடக்கலாம்’’ என அவர் பதில் அளித்தார்.
மகாபந்தனம் கூட்டணியில்,ஆர்.ஜே.டி.யுடன் காங்கிரஸ்,,கம்யூனிஸ்ட்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-பா.பாரதி.