சென்னை

திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் சவுக்கு சங்கர் மீது பெண் டிஎஸ்பி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ளனர்.

சமீபத்தில் பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் யூடியப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார்.  அந்த நேர்காணலில் அவர் காவல்துறை அதிகாரிகள் குறித்தும்,  பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.  சமுக வலைத்தளங்களில்  காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே அவர் கைது செய்யப்பட்டார்.  சவுக்கு சங்கர் மீடியாவில் இருப்பவர்கள் சிலரை கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவித்த நிஐயில் நிலையில் தற்போது சவுக்கு சங்கரே கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சவுக்கு சங்கரின்  காணொளியின் காரணமாக மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பெண் காவலர்களை மிக மிக மோசமாக சித்தரித்துள்ள சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் முசிறி பெண் டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்துள்ளார்.

பெண் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.  சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல்,  அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்,  பெண்களை இழிவுபடுத்துதல்,  தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.