லக்னோ,
உ.பி.யில் நேற்று நடைபெற்ற மத கலவரத்தின்போது ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தாகவும் கூறப்படுகிறது.
உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. அங்கு சிறுபான்மையினர்களுக்கு எதிரான மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக உ.பி.யில் பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் 69வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், உ.பி.யில் அகில பாரதிய வித்யா பரிசத் ( ஏபிவிபி) அமைப்பை சேர்ந்தவர்கள் கஸ்கஞ்ச் என்ற பகுதியில் திரங்க யாத்ரா (“Tiranga Yatra” ) என்ற பெயரில் வாகன யாத்திரை மேற்கொண்டனர்.
இந்த யாத்திரையானது இஸ்லாமியர்கள் பெருமளவு வசிக்கும் பகுதியான ஹல்கா பகுதிக்குள் சென்றது. அப்போது, அவர்கள் மீது ஒருசில இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ஏபிவிபி-ஐ சேர்ந்தவர்களும் பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது இரண்டு பேர் மீது திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதைத்தொடர்ந்து மோதல் தீவிரமடைந்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அதையடுத்து கலவரக்காரர்கள் அந்த பகுதியில் பொதுச்சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்தன. போலீசார் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டது.
அதையடுத்து அந்த பகுதியில் விரைவு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கலவரக்காரர்களை விரட்டியடித்தனர். மேலும் அந்த பகுதி முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில உள்துறை செயலாளர், ஏபிவி ஊர்வலத்தின்போது வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டு சென்றதால், அதை எதிர்த்து ஒருசிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதால் பிரச்சினை உருவானதாகவும், தற்போது அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர் சிவாலாயா பகுதியை சேர்ந்த சுசில் குப்தா என்று தெரியவந்துள்ளதாகவும், கலவரத்தை தொடர்ந்து மாநில முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.