டெல்லி: ஜாமினில் வெளியே வந்த அடுத்த நாளே அமைச்சரா? என கேள்வி எழுப்பி உள்ள உச்ச நீதிமன்றம், செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சரானது தொடர்பாக வரும் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டு இருப்பதால், சாட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஜாமின் அளித்த மறுநாளே அமைச்சராக பதவி ஏற்றது சாட்சியங்களுக்கு நெருக்கடி அளிக்கும் எனவும் கவலை தெரிவித்து உள்ளது. இதனால் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது. இதற்கு காரணம், அவர் சிறையிலேயே அமைச்சராக தொடர்ந்து என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும், அவரது ஜாமின் மனுவை கீழமை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா அமர்வு செப்.26 அன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட்டது. அதைத்தொடர்ந்து, அவர் புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்ததார். இதைத்தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த 3 நாட்களில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது. அதிலும் அவர் ஏற்கெனவே வகித்த மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையே வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார்.
முதலமைச்சரின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குற்றம் நிரூப்பிக்கப்படா விட்டாலும், ஒராண்டு சிறையில் இருந்து விட்டு, தற்போது உச்சநீதி மன்றத்தின் தயவால் ஜாமீனில் வெளியே வந்ததும் எதற்காக செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில், அவருக்குக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமின் தீர்ப்பை திரும்ப பெற கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அபே ஓகா அமர்வு, “மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. பல வழக்குகள் நிலுவையில் உள்ள ஒருவர் அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும்? என வினா எழுப்பியதுடன், நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது ? தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது” என நீதிபதி அபே ஓகா கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் அமைச்சராக இருந்தால், அமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க யார் வருவார்கள் என்று கூறியதுடன், குற்றம் சுமத்தியவர்கள் வாக்குமுலம் அளிக்க பயப்படுவார்கள் என்றும் குறிப்பிட்ட நீதிபதி ஓகா, இதுகுறித்த விளக்கத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.