சென்னை:

குடியுரிமை காக்க ஒருகோடி கையொப்பம் பல கோடிகளாகட்டும் என்று  திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA ) எதிராக திமுக – தோழமைக் கட்சிகள் நடத்தும் கையெழுத்து இயக்கம் (SignatureCampaign)  போலிக் கணக்கு காட்டும் மிஸ்டுகால் இயக்கமல்ல. நீதிக்கான நெடும் பயணம்! நாட்டைப் பிளவுபடுத்துவோருக்கு எதிரான உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும் என்றும்,ஒரு கோடி கையெழுத்து இயக்கம் பல கோடிகளாகட்டும் என்றும் கூறி உள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் – என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிப்ரவரி 2 ஆம் தேதி கொளத்தூரில் ‘கையெழுத்து இயக்கத்தை’ தொடக்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில்,

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்கிற அதிகார ஆணவத்தினால் இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உடைக்கும் வகையில் மொழி-பண்பாடு-இனம்-மதம் எனப் பல தளங்களிலும் தன்னுடைய மதவெறி அடிப்படைச் சித்தாந்தத்தைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக – மத அடிப்படையில் – நாட்டைப் பிளவுபடுத்தும் மனப்பான்மையுடன் ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019 (CAA), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை ஜனநாயகத்திற்குப் புறம்பான வகையில், மக்கள் மீது திணித்து, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி, மாணவர்களையும் மக்களையும் போராட்டக் களத்தில் தள்ளி, நாடு சந்தித்து வரும் பொருளாதாரச் சீரழிவுகளிலிருந்து தேசத்தின் கவனத்தைத் திசை திருப்பி, தனது அடிப்படைவாதச் சித்தாந்தத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

நாட்டை மதரீதியாக பிளவுபடுத்த, பரம்பரை பரம்பரையாக சகோதரத்துவத்துடன் பழகிடும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களிடமும் பிளவினையும் பேதத்தையும் ஏற்படுத்தி, பழமைவாத சிந்தனையுடன் இந்தியாவில் உள்ள இந்து மத பெரும்பான்மை மக்களையும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் நடவடிக்கையின் தொடக்கம்தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் அல்ல, நம்முடைய தோழமைக் கட்சியினர் மட்டுமல்ல, பா.ஜ.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகளே கூறுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் – கல்வியாளர்கள் – சிந்தனையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வலியுறுத்துகின்றனர். ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடைபெறக்கூடிய அளவுக்கு இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் தங்களைப் பதிவு செய்து கொள்ளும் குடிமக்கள், தங்களின் பிறந்த தேதிக்கான சான்றுகளைக் காட்ட வேண்டும் என்கிறார்கள். பெரும்பான்மையான மக்களிடம் அதற்கான சான்றுகள் இல்லை என்பதும், இந்திய அளவில் அதற்கான கட்டமைப்பே சரியாக உருவாக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். தங்களின் பிறந்தநாள் சான்று மட்டுமின்றி, தங்கள் பெற்றோர் குறித்த சான்றுகளும் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பிறந்தநாள், பிறந்த இடம் உள்ளிட்ட விவரங்களில் குழப்பம் ஏற்பட்டால், அவர்கள் கொண்டாடும் பண்டிகையினைக் கேட்டு அறிவதற்கான கையேடும் தரப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் கொண்டாடுகிற பண்டிகைகளின் பெயர்கள் இல்லை என்பதிலிருந்தே இது எத்தகைய கோரமுகத்தைக் கொண்டுள்ள திட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் பா.ஜ.க. அரசின் இத்தகைய தேச விரோதச் செயல்களைக் கண்டித்து கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனவரி 24 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தோழமைக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 2 முதல் 8 வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது எனவும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தொடங்கிய குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் இந்தியாவின் பல பகுதிகளிலும் எழுச்சியுடன் பரவியுள்ளது. மக்களும் மாணவர்களும் அணி அணியாகப் போராட்டக் களங்களில் பங்கேற்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் திரளான மக்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன. தலைநகர் சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் பேரணி ஏற்படுத்திய அதிர்வு இங்குள்ள ஆட்சியாளர்களை மட்டுமல்ல, இந்தியாவை ஆள்பவர்களையும் அதிர வைத்தது.

இந்துக்களும் இஸ்லாமியர்களும் அவர்களுடன் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தினரும் ஒன்றாக இணைந்து போராட்டக் களத்தில் நிற்பதை ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனை விரும்பவுமில்லை. அதனால் மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். நேரத்திற்கு தகுந்தாற்போல மத்திய ஆட்சியாளர்கள் பேசினாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள் என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடுத்தடுத்த பேச்சுகளே சான்றுகளாக இருக்கின்றன. மாநிலத்தை ஆளுகின்ற அடிமை அரசின் ஆட்சியாளர்களோ, இந்த சட்டத் திருத்தத்தால் சிறுபான்மை சமுதாயத்தினரான முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் வகையில் பேசுகிறார்கள்.

இஸ்லாமிய மக்களை மட்டுமல்ல, இலங்கையிலிருந்து தமிழகம் வந்து அகதிகள் முகாமில் பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் இந்து சைவ சமயத்தைச் சார்ந்த தமிழர்களுக்கும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் ஆபத்தை விளைவிக்கிறது. அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. அவர்களுக்கான பாதுகாப்பையும் எடப்பாடி அரசால் உறுதிப்படுத்த முடியவில்லை. மத்திய ஆட்சியாளர்களுக்கு பயந்து நடுங்கி, மாநிலங்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்ததே அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. உறுப்பினர்களின் வாக்குகள்தான். அவர்கள் எதிர்த்திருந்தால் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேறியிருக்காது. நாடாளுமன்றத்தில் துரோகம் செய்துவிட்டு, சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை எனப் பொய்யான வாக்குறுதியை அளிக்கிறது எடப்பாடி அரசு.

அ.தி.மு.க. அரசு கொடுக்கின்ற வாக்குறுதி எதையும் மக்கள் நம்புவதாக இல்லை. நீட் தேர்வு குறித்து அளித்த வாக்குறுதியிலிருந்து அனைத்துமே பொய்யானவை என்பதையும், மத்திய பா.ஜ.க. அரசு ஆட்டுவிக்கின்றபடி ஆடும் பொம்மைகள் இவர்கள் என்பதையும், தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். அதனால், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு இவற்றுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சியினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்திலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவை ஆளும் இடதுசாரி அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இவற்றை எங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அடிமை அரசுக்கு அந்த தெம்பும் இல்லை, திராணியும் இல்லை என்பதும், மத்திய அரசின் முன் நிமிர்ந்து நிற்பதற்கான முதுகெலும்பும் இல்லை என்பதும் நமக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான், அவர்கள் தொடர்ந்து போராட்டக் களங்களைச் சந்தித்து வருகிறார்கள்.

குடியரசு நாளான ஜனவரி 26ஆம் நாளன்று சாதி-மதபேதமின்றி அனைத்து மக்களும் இத்தனை ஆண்டுகாலமாக இல்லாத எழுச்சியுடன் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் ஊர்வலமாக சென்றதும், நாட்டைப் பிளவுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் – மக்கள் தொகை பதிவேடு-குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும் தங்கள் உரிமைக் குரலை தேசப்பற்றுடன் வெளிப்படுத்தினர். எடப்பாடி அரசுக்கு இதையெல்லாம் கவனிக்க ஏது நேரம்?

ஏனென்றால், அன்றைய நாளிலும் அதற்கும் முன்பும் பின்பும் தமிழ்நாட்டையே உலுக்குகின்ற பொதுத் தேர்வாணையத்தின் குரூப்-4 மோசடிகள் அம்பலமாகி, கைது நடவடிக்கைகள் ஆரம்பமாயின. அரசு வேலை என்பது அருகி வரும் காலத்தில் நடுத்தர – ஏழை – பிற்படுத்தப்பட்ட – மிகபிற்படுத்தப்பட்ட –பட்டியலின – பழங்குடி இளைஞர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது இத்தகைய பொதுத் தேர்வாணையம்தான். அதன் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில், விட்டலாச்சார்யா திரைப்படங்களில் வருவது போல ‘மாய மை’ கொண்டு, விடைத்தாள்களில் பதில் எழுதி, பின்னர் அந்த எழுத்து மறைந்ததும், விடைத்தாள்கள் ஏற்றப்பட்டு வந்த வாகனத்திலிருந்து பாதி வழியில், குறிப்பிட்ட விடைத்தாள்களை எடுத்து, சரியான பதில்களை அதிகாரிகளின் துணையுடன் இடைத்தரகர்கள் நிரப்பி, ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த பலர் முதல் மதிப்பெண் பெறுகிற வகையில் செயல்பட்டிருப்பது அம்பலமாகி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இதேபோன்று தேர்வாணையம் தொடர்பான ’வியாபம்’ ஊழல் பல உயிர்களைப் பறித்ததை நாடு மறக்கவில்லை. தமிழ்நாட்டின் வியாபம் என ஏடுகள் சொல்லக்கூடிய அளவிற்கு, தேர்வாணையத்தின் துணையுடன் நடைபெற்றிருக்கும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு உதவிய ஒரு சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், முக்கிய குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காக இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், இவர்கள் சொல்வது போல, விடைத்தாள்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை பாதி வழியில் சாப்பாட்டுக்காகவும் தேநீர் அருந்துவதற்காகவும் நிறுத்தி, அதில் இருந்தவர்களை உணவகத்திற்கு அனுப்பிவிட்டு அந்த குறுகிய இடைவெளியில், சீல் வைக்கப்பட்ட கட்டுகளைப் பிரித்து, குறிப்பிட்ட மாணவர்களின் வினாத்தாள்களை தேடி எடுத்து, சரியான விடைகளை எழுதி, மீண்டும் உள்ளே வைத்து சீல் இடப்பட்டது என்பது ஜீபூம்பா கதையாகவே தெரிகிறது. உயர்மட்டம் வரை ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய மோசடிகள் நடைபெறவே வாய்ப்பில்லை. மேலிடத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற சில பலி ஆடுகள் கைது செய்யப்பட்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது.

மிச்சமிருக்கும் சொற்ப காலத்தில் முடிந்த வரை சுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் எடப்பாடி தலைமையிலான அடிமை அ.தி.மு.க அரசில் எந்த வித நியாயமும் நீதியும் கிடைக்காது. மக்களின் எழுச்சியும் அவர்களின் ஒத்துழைப்பும்தான் நீதியை நோக்கிய பயணத்திற்குத் துணை நிற்கும். திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சியினரும் நடத்துகின்ற கையெழுத்து இயக்கம் என்பது நீதிக்கான நெடும்பயணம்.

கழகத்தின் நிர்வாகிகள் அதனை உணர்ந்து, மாவட்டந்தோறும் கையெழுத்து இயக்கத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும். நம்முடைய மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர்-ஊராட்சிப் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து கையெழுத்து இயக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதுடன், தோழமைக் கட்சி நிர்வாகிகளையும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிடச் செய்ய வேண்டும். தங்களுக்கு அனுப்பப்படும், கையெழுத்து இயக்கத்திற்கான படிவம் குறித்த விளக்கங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது எப்படி என்பதை அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றால் விளையக்கூடிய அபாயங்களையும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக அவை இருப்பதையும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைப்பதையும் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் போல விளக்கிட வேண்டும். நீங்கள் சந்திக்கப் போகும் மக்கள் ஒவ்வொருவரும் அதனைப் புரிந்துகொண்டு, மனதார கையெழுத்திட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். இது போலிக் கணக்குக் காட்டும் ‘மிஸ்டு கால்’ இயக்கமல்ல. மக்கள் தங்கள் உள்ளத்து உண்மை உணர்வை கையெழுத்தாக வெளிப்படுத்துகின்ற இயக்கம்.

தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்தினைப் பெறுவது என்பதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. பிப்ரவரி 2 முதல் 8 வரை இந்தப் பயணம் வீடு வீடாகத் தொடர்ந்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, பொதுக்கூட்டம்-மாநாடு போன்றவையாக இருந்தாலும், தேர்தல்-கழக வளர்ச்சி ஆகியவற்றுக்கான நிதி திரட்டலாக இருந்தாலும் எதிர்பார்க்கும் இலக்கைவிட அதிகமான எண்ணிக்கையை எட்டுவதுதான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் காட்டிய வழி. அதன்படி, ஒரு கோடி மக்கள் கையெழுத்து இயக்கம், பல கோடிகளாக பெருகட்டும். நாட்டைப் பிளவுபடுத்தும் கொடிய சட்ட திட்டங்களுக்கு எதிரான உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகின்ற மதச்சார்பற்ற-வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற இந்திய ஒன்றியம் நிலைத்துச் செழிக்கட்டும்!

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.