சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் இந்த இல்லத்தில் யாராலும் தங்க முடியவில்லை என்று அங்கு பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் கூறி வருகின்றனர்.

அவர்கள் கூறுவதை பொய் என்று புறம்தள்ள முடியாத சூழல் தான் நிலவுகிறது. வீட்டின் போர்டிகோவில் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு பிறகு உயர் பொறுப்பில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஆள் நடமாட்டம் இன்றி வேதா இல்லம் பேய் பங்களா போன்ற தோற்றத்துடன் தற்போது உள்ளது. தனியார் நிறுவன காவலாளிகள் மூலம் இந்த இல்லம் கடுமையான பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. எனினும் அவர்களும் பாதுகாப்பு அறையை தாண்டி வீட்டினுள் எங்கும் செல்லாமல் இருந்து வருகின்றனர். இதற்கு அச்சமும் ஒரு காரணம்.

அடிப்படை பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், வீட்டில் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம்பள பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வாரத்தில் டிடிவி தினகரன் இந்த வீட்டிற்கு வருவதை நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

‘‘பலர் இங்கு இரவில் தங்குவதை விரும்பவில்லை. சிலருக்கு சென்னையிலேயே பெரிய வீடு இருப்பதால் இங்கு வருவதில்லை’’ என்று இரவுப் பணியில் இருந்த மற்றொரு காவலாளி தெரிவித்தார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போயஸ்கார்டன் இல்லம் இசட் பிரிவு பாதுகாப்பில் ஏகப்பட்ட கெடுபிடியுடன் தான் இருக்கும்.

ஆட்சியில் இருந்தால் போயஸ்கார்டன் பகுதிக்குள்ளேயே எந்த வாகனமும் எளிதில் நுழைய முடியாமல் இருக்கும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், வேதா இல்லத்திற்குள் எளிதில் நுழைந்து ஜெயலலிதாவை சந்திக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் இருக்கும். ஜெயலலிதா கண் அசைத்தால் தான் வீட்டின் கதவுகள் திறக்கும் என்ற நிலை இருந்தது.

வீட்டினுள் என்ன நடக்கிறது அங்கு வாசலில் பணிபுரியும் ஊழியர்கள் கூட அறிய முடியாத நிலையில் எப்போதும் மர்மம் சூழ்ந்து தான் இருந்தது. ஒற்றை ஆளுமை சக்தியாக விளங்கிய ஜெயலலிதாவின் வேதா இல்லம் இப்போது பேய் பங்களா என்ற பெயருடன், யாரும் மீண்டும் உள்ளே நுழைய முடியாத நிலையிலேயே மர்மத்துடன் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.