ஐதராபாத்:

தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளில், 7 தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்த தெலங்கானா காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.


புதிதாக அமைந்த தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

கடந்த டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை கைப்பற்றி தெலங்கானா ராஷ்ட்ரி சமிதி வெற்றிபெற்றது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வரானார்.

காங்கிரஸ் கட்சி 19 சட்டப்பேரவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
வரும் மக்களவை தேர்தலில் கம்மம், மஹபூபபாத், போங்கிர், செவல்லா, நல்கொண்டா உட்பட 7 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து 17 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 7 தொகுதிகளே காங்கிரஸ் கட்சியின் இலக்காக உள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வாக்குகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளனர்.