டில்லி
டில்லி மற்றும் பாகிஸ்தான் இடையிலான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது
இந்திய தலைநகர் டில்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூர் வரை செல்லும் ரெயில் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ஆகும். வாரத்துக்கு இருமுரை செல்லும் இந்த ரெயில் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டில்லியில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இந்திய பகுதியில் டில்லியில் இருந்து அட்டாரி வரையிலும் பாகிஸ்தான் பகுதியில் லாகூரில் இருந்து வாகா வரையில் செல்லும்.
புல்வாமாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் மேலும் தாக்குதல் நடத்த காஷ்மீர் எல்லைக்குள் முகாமிட்டிருந்தது. அந்த முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அடியோடு அழித்தது. அதை ஒட்டி சம்ஜாதா எக்ஸ்பிரஸ் சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்தது. இந்தியாவும் அதையே பின் பற்றியது.
நேற்று பாகிஸ்தானால் சிறைபிடிக்கபட்ட விங் கமாண்டர் அபிநந்தன் உலக நாடுகள் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு இந்திய ரெயில்வே மற்றும் பாகிஸ்தான் ரெயில்வே ஆகியவை மிண்டும் ரெயில் சேவையை தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன. இதை இந்திய ரெயில்வே மற்றும் பாகிஸ்தான் ரெயில்வே இணைந்து இயக்குகின்றன.
சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் டில்லியில் இருந்து லாகூருக்கு மீண்டும் செல்ல உள்ளது. நாளை மறுநாள் திங்களன்று பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கான சேவை லாகூரில் இருந்து தொடங்க உள்ளது. சம்ஜாதா என்னும் சொல்லுக்கு ஒப்பந்தம் என பொருள் ஆகும்.