தமிழில் கே பாலசந்தரின் மன்மதலீலை என்னும் படத்தில் அறிமுகமானவர் ஜெயப்ரதா. தமிழில் அதிக வாய்ப்புக்கள் வராமல் தனது தாய் மொழியான தெலுங்கு திரையுலகில் புகழ் பெற்ற நடிகை ஆனவர். அதற்குப் பிறகு நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள் போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துப் பின் தெலுங்கு, இந்தி என பன்மொழி நடிகை ஆனார். இவர் நடித்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட சலங்கை ஒலி படம் வெள்ளி விழாப் படமாகும்
வெகு நாட்களுக்குப் பிறகு கமலஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக தோன்றினார். அதற்குப் பின் தற்போது அவர் நடிக்கும் மலையாளப் படமான கிணர் தமிழில் கேணி என்னும் பெயரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஜெயப்ரதாவுடன் பசுபதி, பார்த்திபன், நாசர், ரேவதி, அர்ச்சனா, அனு ஹாசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சிறிய படமாக இருந்தாலும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இதற்கு முன்பு மோகன்லால் – ஜெயப்ரதா நடித்த பிரணயம் மலையாளப் படத்தை தயாரித்தவர் என்பதால் ஜெயப்ரதா உடனடியாக ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.