திருப்பதி
ஊரடங்கால் பக்தர்கள் வர அனுமதி நிறுத்தப்பட்டதால் 1400 ஒப்பந்த தூய்மை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருப்பதி, திருமலை உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அரசு அறிவித்த ஊரடங்கு இருமுறை நீட்டிக்கப்பட்டதால் பக்தர்களின் வருகை அடியோடு நிறுத்தப்பட்டது. சுவாமிக்கு நித்திய பூஜைகள் மட்டும் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது.
திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருக்கும் அரங்குகளில் தூய்மைப் பணிகளைச் செய்ய ஒப்பந்த முறையில் பல்வேறு நிறுவனங்கள் மூலம் 1400 துப்புரவுத் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த தூய்மை ஊழியர்களுக்குப் பணி எதுவும் இல்லை என்பதால் இவர்களை ஒப்பந்த நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் திருப்பதி விஷ்ணு நிவாசம் தேவஸ்தான ஓய்வறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் கருணாகர ரெட்டி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் முரளி உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அப்போது ”ஊரடங்கு காரணமாக தற்போது ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரடங்குக்குப் பிறகு வேறு எந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தாலும், உங்களையே பணியில் அமர்த்த உள்ளன. நாக்கள் உங்கள் வேலைக்கு உறுதி அளிக்கிறோம்.” எனத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆயினும் தொழிலாளர் தினமான நேற்று அதிரடியாக 1400 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது பலருக்கும் வேதனை அளித்துள்ளது.