டெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த நவம்பர் முதல் டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர். குடியரசு தின விழா அன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளனர்.

இந் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து சிங்கு எல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கிராந்திகாரி விவசாயிகள் சங்கத் தலைவர் தர்ஷன் பால் கூறியதாவது: பிப்ரவரி 1ம் தேதி பல்வேறு பகுதிகளிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.  இது நாட்டின் ஒட்டு மொத்த போராட்டம் என்பதை உணர்த்தும்.

டிராக்டர் பேரணிக்கு வந்தவர்கள் திரும்ப செல்லமாட்டார்கள். அவர்களும் போராட்டத்தில் பங்கெடுக்க உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும், அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.