சென்னை

மிழகத்துக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி கூடுதலாக 10 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1600 ஐ தாண்டியது.  நேற்று வரை தமிழகத்தில் சுமார் 8.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 12,841 பேர் உயிர் இழந்துள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5ஆம் இடத்தில் உள்ளது.

தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், “தற்போது தமிழகத்தில் உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.   இதுவரை தமிழகத்தில் 512 இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தற்போது தேர்தல் பணிகள் மும்முரமாக நடப்பதால் அந்த பணிகளில் ஈடுபடும் அனைவரும் கொரோனா  தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும்.   அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.  மக்கள் யாரும் தானாக மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்

இப்போது நம்மிடம் 14 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.  வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி கூடுதலாக  10 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளன.  எனவே மக்கள் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு குறித்து எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.